சிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.19¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை


சிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.19¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2021 10:11 PM IST (Updated: 6 Oct 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.19¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம், 

அதிரடி சோதனை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவி உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கொத்தட்டை மெயின் ரோட்டில் உள்ள குடோன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். 

30 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

அப்போது 30 டன் எடை கொண்ட ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டைகளாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 19 லட்சத்து 25 ஆயிரத்து 298 ரூபாய் ஆகும். இதையடுத்து போலீசார் அங்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 
விசாரணையில், கொத்தட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி மகன் இளவரசன் என்கிற இளங்கோவன் (வயது 44) என்பவர் வெளியூர்களில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து குடோனில் பதுக்கி வைத்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், கடலூர், விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அனுப்பி விற்பனை செய்தது தெரிய வந்தது. 

கைது

அதைத்தொடர்ந்து மொத்த வியாபாரியான இளங்கோவனை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது எனவும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.19¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட குடோன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story