திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது பக்தர்கள் சாமி தரிசனம்


திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 Oct 2021 10:18 PM IST (Updated: 6 Oct 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லிக்குப்பம், 

தேசிகர் பிரம்மோற்சவம்

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேசிகர் பிரம்மோற்சவம் 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் வருகிற 17-ந்தேதி வரை வெளியூர் பக்தர்கள் வர தடை விதித்ததோடு, 17-ந்தேதி வரை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளது. 

கொடியேற்றம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு 4 மணியளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பெருமாள் மற்றும் தேசிகர் முன்னிலையில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பிறகு தேசிகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொரோனா வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

விடையாற்றி உற்சவம்

பிரம்மோற்சவ விழா குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேசிகர் பிரம்மோற்சவ விழாவின்போது வழக்கமாக காலை, மாலையில் சாமி வீதி உலா நடைபெறுவது இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் உட்பிரகாரத்தில் பெருமாள், தாயார் மற்றும் தேசிகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருகிற 15-ந்தேதி ரத்தனங்கி சேவை மற்றும் 17-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது என்றனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து கையில் கிருமி நாசினி தெளித்து உடல் வெப்ப பரிசோதனை செய்து கடும் கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Next Story