காரைக்கால் கலெக்டர் அலுவலகம் முன் ரேஷன்கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ரேஷன்கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால், அக்.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ரேஷன்கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் கடைகள் மூடல்
புதுச்சேரி மாநிலத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கவேண்டும், நிலுவை ஊதியத்தை உடனே வழங்கவேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் நேற்று காரைக்கால் வந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் கலெக்டர் அர்ஜூன்சர்மாவை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக காரைக்காலை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ரேஷன்கடை ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினர்.
அப்போது, காரைக்கால் மதகடியை சேர்ந்த ஊழியர் சார்லஸ் (வயது 36), கையில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை திடீரென்று தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள், சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சார்லஸ் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்து, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த முயன்றனர்.
போராட்டம்
ஆனால் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த காரைக்கால் நகர போலீசார் மற்றும் அமைச்சரின் பாதுகாப்பு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரவில்லை.
இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story