அதிகாரிகள் அலட்சியத்தால் பேரிடர் நினைவு சின்னமான வாய்க்கால் பாலம் சாலைவசதியின்றி 20 கிராம மக்கள் தவிப்பு
அதிகாரிகள் அலட்சியத்தால் பேரிடர் நினைவு சின்னமாக வாய்க்கால் பாலம் அமைந்துள்ளது. இதனால் 20 கிராம மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பரங்கிப்பேட்டை,
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
பரங்கிப்பேட்டையில் இருந்து கடலூருக்கு வரும் வகையில் கடற்கரையோரம் தார் சாலை உள்ளது. சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார் பேட்டை, குமார பேட்டை, மடவாபள்ளம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.
நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த சாலையில், சாமியார் பேட்டை-குமாரபேட்டை கிராமங்களுக்கு இடையே ஒரு வாய்க்காலின் குறுக்கே பாலம் ஒன்றுள்ளது.
இந்த பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது, ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதிகாரிகள் பாலத்தை சீரமைக்க முன்வரவில்லை. மாறாக அதன் அருகே, மண்சாலை அமைத்து தற்காலிகமாக அந்த பகுதியை கடந்து செல்வதற்கான வழியை மட்டு்ம் ஏற்படுத்தி கொடுத்தனர்.
ஆனால் உடைந்த பாலத்துக்கு பதில் மாற்றுப்பாலம் கட்டித்தர முன்வரவில்லை. இதன் மூலம் பேரிடர் கால நினைவு சின்னமாக இதை அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.
அரசு பஸ் நிறுத்தம்
தற்போது, பாலத்தின் அருகே மண் சாலை தற்காலிகமாக அமைத்து இருந்தாலும், அதுவும் பாதுகாப்பற்ற நிலையில் தான் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள கிராமத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக மடவாபள்ளம் கிராமத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால் பெரியகுப்பம், பேட்டோடை, நஞ்சலிங்கம்பேட்டை, மாலுமியார் பேட்டை, அன்னப்பன்பேட்டை, அய்யம்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, சாமியார்பேட்டை, குமாரபேட்டை உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அங்கிருந்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் என்று அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக சீரமைக்க வேண்டும்
எதிர்வரும் பருவ மழைக்காலத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் கூட, இங்குள்ள மக்கள் பாதுகாப்பாக உடனடியாக வெளியேற சரியான சாலை வசதி இல்லை. அதுபோன்ற நெருக்கடி காலங்கள் என்பது இவர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
எனவே எதிர்வரும் பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு, இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று இச்சாலையை சார்ந்துள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story