மனைவியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தொழிலாளி வாக்குமூலம்
என்னுடன் வாழ விரும்பாததால் மனைவியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அனுப்பர்பாளையம்
என்னுடன் வாழ விரும்பாததால் மனைவியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் மனைவி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்த மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணையா-மணிமுத்து தம்பதியின் மகள் வைஷ்ணவி (21) என்பவரும் வேலை செய்து வந்தார்.
ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால் அருண்குமாருக்கும், வைஷ்ணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கொலை
திருமணத்திற்கு பிறகு இளம் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வைஷ்ணவி சில மாதங்கள் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள தாயார் வீட்டிலும், சில நாட்கள் அருண்குமாருடன் போடிநாயக்கனூரிலும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அருண்குமார் திருப்பூர் பண்ணாரியம்மன் நகரில் வாடகைக்கு வீடு பார்த்து அங்கு தனது மனைவியுடன் குடியேறினார். அங்கும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் பெல்ட்டால் வைஷ்ணவியின் கழுத்தை இறுக்கினார். இதில் வைஷ்ணவி துடிதுடித்து இறந்தார்.
கைது
வைஷ்ணவி இறந்து விட்டதை உறுதி செய்த அருண்குமார் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த நிலையில் பாண்டியன்நகரை அடுத்த கூத்தம்பாளையம் பிரிவு பகுதியில் பதுங்கியிருந்த அருண்குமாரை இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
திருமணம் முடிந்த 3 மாதங்கள் வரை வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. பின்னர் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. இதனால் வைஷ்ணவி கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு விலக தொடங்கினாள். மேலும் அவளுடைய தாயாரின் தூண்டுதலின் பேரில் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்றும் வைஷ்ணவி கூறினாள்.
நான் வைஷ்ணவி மீது அதிக அன்பு வைத்ததால் விவாகரத்து வேண்டாம். இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறினேன். அதற்கு வைஷ்ணவியும், அவருடைய தாயாரும் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் என்னுடன் வாழ விரும்பாதவள் எவனுடனும் வாழவே கூடாது என்று நினைத்து, வைஷ்ணவியை கொலை செய்ய முடிவு செய்தேன்.
கொன்றேன்
அதன்படி சம்பவத்தன்று போயம்பாளையத்தில் தாயார் வீட்டில் இருந்த வைஷ்ணவியை ஏற்கனவே பார்த்து வைத்திருந்த வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றேன். அப்போதும் நாம் தனிக்குடித்தனம் வாழலாம் என்று கூறியதை வைஷ்ணவி ஏற்க மறுத்ததால், நான் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழட்டி காதல் மனைவி என்றும் பாராமல் வைஷ்ணவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
பின்னர் மோட்டார்சைக்கிளை பாண்டியன் நகரில் நிறுத்திவிட்டு எனது சொந்த ஊரான போடிநாயக்கனூருக்கு சென்றேன். அங்கு செலவுக்கு பணம் இல்லாததால் பாண்டியன் நகரில் நிறுத்தி சென்றிருந்த மோட்டார்சைக்கிளை விற்று கிடைக்கும் பணத்தை செலவுக்கு வைத்து கொள்ளலாம் என்று நினைத்து பாண்டியன்நகருக்கு மோட்டார்சைக்கிளை எடுக்க வந்தேன்.
சிறையில் அடைப்பு
ஆனால் நான் திருப்பூருக்கு வந்தது போலீசாருக்கு தெரிந்து விட்டதால் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அருண்குமாரை திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அருண்குமார், மைத்துனரை தாக்கிய வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறைக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story