வணிக வரித்துறை பெண் ஊழியருக்கு சிறை தண்டனை உறுதி
தேனியில் காசோலை மோசடி வழக்கில் வணிக வரித்துறை பெண் ஊழியருக்கு சிறை தண்டனை உறுதி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
தேனி:
தேனி பவர்ஹவுஸ் தெருவை சேர்ந்த தனிக்கொடி மகன் தயாளன் (வயது 36). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம், கடந்த 2019-ம் ஆண்டு தேனி வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவி எழுத்தராக பணியாற்றிய லதா என்பவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இந்த கடன் தொகைக்காக காசோலை அளித்தார்.
அந்த காசோலையை தயாளன் தனது வங்கிக் கணக்கில் செலுத்தினார். அப்போது லதாவின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி காசோலை திரும்பியது. இதற்கிடையே லதா திண்டுக்கல் வணிக வரித்துறை அலுவலகத்துக்கு பணியிட மாறுதலாகி சென்று விட்டார். இதனால், அவருக்கு வக்கீல் மூலமாக தயாளன் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதில் அளிக்காததால், தேனியை சேர்ந்த வக்கீல் செல்வக்குமார் மூலமாக தேனி நீதித்துறை நடுவர் விரைவு கோர்ட்டில் தயாளன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் லதாவுக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன், அவர் கடனாக வாங்கிய ரூ.5 லட்சத்தை 9 சதவீதம் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், திருப்பிக் கொடுக்காவிட்டால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் கடந்த ஜனவரி மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வெங்கடேசன் முன்னிலையில் நேற்று நடந்தது. விசாரணை முடிவில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், ஏற்கனவே நடுவர் விரைவு கோர்ட்டு லதாவுக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்தும் நீதிபதி வெங்கடேசன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story