நாகை, வேதாரண்யத்தில் கடற்கரைகள் வெறிச்சோடின
மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் நாகை ,வேதாரண்யத்தில் கடற்கரைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
நாகப்பட்டினம்:
மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் நாகை ,வேதாரண்யத்தில் கடற்கரைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
மகாளய அமாவாசை
மகாளய அமாவாசை தினத்தில் புண்ணியதலங்களுக்கு சென்று நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்கள் வழிபாட்டில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் கடற்கரை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் வந்து செல்வார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. வாரத்தில் மற்ற நாட்கள் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகாளய அமாவாசை புதன்கிழமை அன்று வருவதால் கட்டுப்பாடு இருக்காது. எனவே தர்ப்பணம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
கடற்கரைகள் வெறிச்சோடின
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மகாளய அமாவாசை அன்று கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கும், தர்ப்பணம் கொடுப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் நேற்று மகாளய அமாவாசையையொட்டி நாகையில் கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.
நாகை புதிய கடற்கரைக்கு செல்லும் சாலையின் முகப்பில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
போலீசார் பாதுகாப்பு பணி
இதேபோல வேதாரண்யம் சன்னதி கோடியக்கரை ஆதிசேது கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மக்கள் கடற்கரைக்கு செல்லாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலும் மூடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story