திண்டுக்கல் மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல்


திண்டுக்கல் மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 6 Oct 2021 11:04 PM IST (Updated: 6 Oct 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது.
இடைத்தேர்தல்
தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதோடு திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் காலியாக இருக்கும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஊராட்சி தலைவர்கள், 2 ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் 28 பதவிகள் காலியாக உள்ளன.
இந்த பதவிகளுக்கு கடந்த மாதம் வேட்புமனு தாக்கல் நடந்தது. அதில் 28 பதவிகளுக்கும் மொத்தம் 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 10 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் 38 பேர் தங்களுடைய வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதனால் 60 பேர் மட்டுமே களத்தில் இருந்தனர்.
நாளை மறுநாள் நடக்கிறது 
மேலும் ஆண்டிப்பட்டி, ஆவிளிபட்டி ஆகிய 2 ஊராட்சி தலைவர்கள், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் போட்டியிட்டதால் 15 பேரும் போட்டியின்றி தேர்வாகினர். இதைத் தொடர்ந்து 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், வில்பட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய 2 ஊராட்சி தலைவர்கள், 2 ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம் 13 பதவிகளுக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
இந்த 13 பதவிகளுக்கும் 45 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி தேர்தலுக்கு 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். எனவே பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
மதுக்கடை-பார்களுக்கு 4 நாட்கள் விடுமுறை
திண்டுக்கல் மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் செயல்படும் மதுக்கடைகள் மட்டுமே மூடப்படுகின்றன. அதன்படி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை மறுநாள் வரை மாவட்டம் முழுவதும் 51 அரசு மதுபானக்கடைகள், 19 தனியார் பார்கள் மூடப்படுகின்றன. மேலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான வருகிற 12-ந்தேதி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 74 அரசு மதுக்கடைகள், 40 தனியார் பார்கள் மூடப்படுகின்றன. இந்த மதுக்கடைகள், பார்கள் மூடப்படுவதை உறுதி செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் விசாகன் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story