தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா காரிக்கோட்டை தெற்குதெருவில் காரி அழகர் அய்யனார் கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்கின்றன. சாலையின் குறுக்கே இந்த மின்கம்பிகள் செல்வதால் கனரக வாகனங்கள், பஸ்கள் செல்லும்போது உரசி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. கனரக வாகனங்கள், பஸ்கள் தார்சாலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் நிலை உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் கம்பிகளை சரி செய்ய வேண்டும்.
திருப்பணி நண்பர்கள், காரிக்கோட்டை.
நடைபாதையில் பள்ளம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்குபகுதி வளவனாறு பாலம் முகப்பு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பள்ளத்தை சரி செய்து மக்கள் நடந்து செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
- பொதுமக்கள், வாய்மேடு மேற்கு.
போக்குவரத்து நெரிசல்
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரப்பகுதியான மேலவீதியில் உப்பளத்திற்கு செல்லும் லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் சென்றுவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் சிறு, சிறு விபத்துக்களில் சிக்கக்கூடிய நிலை உள்ளது. கடைகளுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வணிகர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் லாரிகளை நிறுத்த தடை விதித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வியாபாரிகள், வேதாரண்யம்.
தார்ச்சாலை வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் ஓலையம்புத்தூர் கீழத்தெரு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இது மண்சாலையாக காணப்படுவதால் மழை பெய்தால் சகதியாகி விடுகிறது. இதனால் மக்கள் நடந்து செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல முறை கோரிக்கை வைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக சாலை போடப்படவில்லை. எனவே மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ஓலையம்புத்தூர்.
சேறும், சகதியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் விக்ரபாண்டியம் மேலதெரு சாலை சேறும், சகதியுமாக உள்ளது. வடிகாலுக்கு செல்லும் நீர்வழி பாதை அடைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் மற்றும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.
- தமிழ்.ஆசைதம்பி, விக்ரபாண்டியம்.
திறந்தவெளியில் மது அருந்துவது தடுக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு சிலர் மது அருந்துவிட்டு அப்படியே பாட்டில்களை வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். மது அருந்த பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளையும் வீதியிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். மேலும் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளதால் குப்பைகள் தேங்கி, கொசுகள் உற்பத்தியாவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே திறந்தவெளியில் மது அருந்துவதை தடுப்பதுடன் குப்பைகளை உடனே சுத்தம் செய்ய வேண்டும்.
-பொதுமக்கள், மன்னார்குடி.
Related Tags :
Next Story