வேளாண் அதிகாரி போல் பேசி விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் நூதன மோசடி மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு


வேளாண் அதிகாரி போல் பேசி விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் நூதன மோசடி மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Oct 2021 11:40 PM IST (Updated: 6 Oct 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வேளாண் அதிகாரி என்று கூறி விவசாயி வங்கி கணக்கிலிருந்து ரூ.3 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை:
விவசாயி 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியானை பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). விவசாயி. இவர், கந்தர்வகோட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தான் வேளாண் துறையை சேர்ந்த கள அலுவலர் என்றும், தங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 
 இதனால் தங்கள் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு நம்பரை சொல்லுமாறு கூறினார். அதனை நம்பிய ராஜேந்திரன், வங்கி கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம.் கார்டு நம்பரை கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து ராஜேந்திரன் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வந்துள்ளது. அந்த எண்ணையும் அவர் கூறியுள்ளார்.
நூதன முறையில் மோசடி 
அடுத்த சில நிமிடங்களில் ராஜேந்திரன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தார். ஆனால் வங்கி அதிகாரிகள் நாங்கள் பணத்தை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ராஜேந்திரன் புதுக்கோட்டையில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயிடம் நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story