10-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டுகள், நடுகற்கள் கண்டெடுப்பு


10-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டுகள், நடுகற்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 11:56 PM IST (Updated: 6 Oct 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

ஜவ்வாதுமலையில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டுகள், நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

ஜவ்வாதுமலையில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டுகள், நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை தாலுகா கோவிலூர் கிராமத்தில் உள்ள திருமூலநாதர் சிவன் கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க அரிய பல கல்வெட்டுகள் உள்ளன. 

இந்த கோவிலின் அருகில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், மதன்மோகன், ஸ்ரீதர், பழனிசாமி மற்றும் நந்தகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வில் 3 செக்கு கல்வெட்டுகளும், 3 நடுகற்களும் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- 

இதில் உள்ள 2 செக்கு கல்வெட்டில் 10-ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு "ஸ்ரீ பரதன் கூரிதனநன் மக....ன் றி ...க்கு" என்று வெட்டப்பட்டு உள்ளது. இதன் பொருள் ஸ்ரீபரதன் என்பவர் மகன் இச்செக்கை செய்தளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு செக்கில் "ஸ்ரீ...றை..பொ மகன்" என்று உள்ளது. இதன் பொருள் செக்கு செய்தளித்தவரின் பெயராக இருக்க வாய்ப்புள்ளது. இது அதிகமான பொரிந்து போய் உள்ளதால் படிக்க இயலவில்லை. 

கல்வெட்டு படிக்க முடியாத...

அதே போல் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 நடுகற்கலில் ஒன்று உடைந்தும், மற்றொன்று சாய்ந்தும் உள்ளது. நல்ல நிலையில் உள்ள நடுகல்லில் கல்வெட்டு படிக்க முடியாத அளவிற்கு பொரிந்து போய் உள்ளதால் அவற்றையும் முழுமையாக படிக்க இயலவில்லை. இதன் காலமும் 10 அல்லது 11-ம் நூற்றாண்டினதாகலாம். 

இந்த செக்குகள் மூலம் அந்த காலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டிற்கும், கோவில் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்குகள் மூலம் 2 புதிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. 

ஏற்கனவே கோவிலில் கிடைக்க பெற்ற கல்வெட்டுகள் மூலம் இக்கோவிலின் காலம் இதுவரை 12-ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டிருந்தது.

இந்த செக்கின் எழுத்தமைதி 10-ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டிருப்பதால் இக்கோவில் சுமார் 10-ம் நூற்றாண்டிலேயே கட்டப்பெற்றிருக்கலாம் என்றும், அந்த கோவிலில் சிவனுக்கு விளக்கு எாிக்கவும் இதர பயன்பாட்டிற்கும் எண்ணெய் உற்பத்தி செய்ய 3 செக்குகள் ஏற்படுத்தப்பட்டன என்றும் அறியலாம். இதன் மூலம் கோவிலின் காலம் 2 நூற்றாண்டுகளுக்கு முன்னோக்கி செல்கின்றது. 

கோவிலூர் சிவன் கோவில் அருகே ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புலிகுத்திப் பட்டான் நடுகல்லிலும் மங்கல பரதன் மகன் வில்லி என்பவர் இறந்த செய்தி வருகிறது.

இந்த பரதன் என்ற பெயர் இந்த செக்கு கல்வெட்டிலும் வருகிறது. எனவே இந்த பகுதியை பரதன் என்ற வம்சா வழியை சேர்ந்தவர்களின் ஆளுகைக்கு கீழ் இப்பகுதி இருந்தது என அறியலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story