கல்குவாரி- அரிசி ஆலையை கிராம மக்கள் முற்றுகை
கல்குவாரி- அரிசி ஆலையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கீழப்பழுவூர்:
கிராம மக்கள் முற்றுகை
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள மேலப்பழுவூர் கிராமத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து ஜல்லிக்கற்கள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் நேற்று அந்த கல்குவாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக அளவுக்கதிகமாக வெடிபொருட்களை பயன்படுத்தி பாறைகளை உடைப்பதால் குடியிருப்பு பகுதிகளில் பெரும் அதிர்வும், சத்தமும் ஏற்படுகிறது. திடீரென ஏற்படும் சத்தத்தால் குழந்தைகள், முதியவர்கள் என பலரும் அச்சப்படுகின்றனர். மேலும் அதிர்வால் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் உதிர்கின்றன. குவாரி பகுதியில் வெடி வைத்து 200 அடிக்கு மேல் பாறைகள் தகர்த்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் அவ்வழியே செல்லும் விவசாயிகளின் ஆடு, மாடுகள் தவறி விழுந்து உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
கோரிக்கை
எனவே அளவுக்கு அதிகமான சத்தம் மட்டும் அதிர்வுகளை ஏற்படுத்தும் வெடிபொருட்களை பயன்படுத்தக்கூடாது. இதுபோன்று 200 அடிக்கு மேல் கல்லை வெட்டி எடுக்கும் அளவிற்கு அரசிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து கல்குவாரி அருகில் உள்ள தனியார் அரிசி அரவை ஆலையை அவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, அந்த ஆலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் வீசும் கழிவுநீரை ஆலைக்கு பின்புறம் உள்ள தண்ணீர் வரத்து ஓடையில் தேக்கி வைத்துள்ளனர். மழைக்காலங்களில் அந்தக் கழிவுநீர், மழைநீருடன் கலந்து, குடிநீருக்கு பயன்படுத்தப்படும் குளத்தில் வந்து கலக்கிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story