சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2021 8:05 PM GMT (Updated: 6 Oct 2021 8:05 PM GMT)

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.

பெரம்பலூர்:

நவராத்திரி விழா
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 40-வது ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு மதுரகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் மதுரகாளியம்மன் ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். அதன்படி இன்று (வியாழக்கிழமை) மீனாட்சி அலங்காரமும், நாளை (வெள்ளிக்கிழமை) காமாட்சி அலங்காரமும் நடக்கிறது. 9-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 10-ந்தேதி துர்க்கை அலங்காரமும், 11-ந்தேதி கருமாரியம்மன் அலங்காரமும், 12-ந்தேதி மாரியம்மன் அலங்காரமும், 13-ந்தேதி லெட்சுமி அலங்காரமும் நடக்கிறது.
3 நாட்கள் அனுமதியில்லை
வருகிற 14-ந்தேதி ஆயுதபூஜை விழாவில் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரமும் செய்யப்படுகிறது. 15-ந்தேதி விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவுபெறுகிறது.
தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலிலும், நவராத்திரி விழாவிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மற்ற நாட்களில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபடவும், நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறையின்படி இந்த ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெறவில்லை.
பக்தர்கள் வழிபாடு
இதற்கிைடயே புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி மதுரகாளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. மகாளய அமாவாசை என்பதால் கோவிலுக்கு பெரம்பலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர். அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

Next Story