தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
புதுஆற்றில் இருந்து 9-ம் நம்பர் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் சரவண்தெரு, தெக்கூர், கக்கரைக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்லும் வாய்க்கால்களாக உள்ளது. இதில் ஏகப்பட்ட புதறுகள், செடிகள், கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்வது தடை படுகிறது. எனவே வாய்க்காலை தூர்வாரி தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.மோகன், தெக்கூர்.
---------
ஆபத்தான நிலையில் சத்துணவு கூடம்
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா தீட்ச்சமுத்திரம் ஊராட்சியில் உள்ள முல்லைக்குடி ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் சத்துணவு கூடம் இடிந்து சேதம் அடைந்துள்ளது. அடுத்தமாதம்(நவம்பர்) 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் சத்துணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்படி இடிந்து விழும் நிலையில் உள்ள சத்துணவு கூடத்தில் சமையல் செய்தால் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். எனவே சத்துணவு கூடத்தை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், முல்லைக்குடி.
புதிய தார்சாலை வேண்டும்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா கீழகொட்டையூர் மேலதெரு மண்சாலையாக காணப்படுகிறது. இந்த சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். மழை பெய்தாலே சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் வந்து பார்க்கக்கூட இல்லை. எனவே மண் சாலையை புதிய தார்சாலையாக அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், கீழகொட்டையூர்.
--
மின்கம்பம் தள்ளி வைக்கப்படுமா?
தஞ்சை விளார்சாலை தில்லைநகரில் உள்ள சேரன் மூன்றாம் தெருவிற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, இடையூறு இல்லாத வகையில் மின்கம்பத்தை நட வேண்டும்.
முத்துக்குமார், தஞ்சாவூர்.
சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்
தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு்ளளது. ஆனால் பல இடங்களில் பாதாள சாக்கடை குழியில் இருந்து தண்ணீர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. தஞ்சை பாலோப்பநந்தவனம் பாரதிநகரில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறுபோல் ஓடியது. இதனால் மக்கள் அந்த சாலையில் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் சென்றதால் மக்கள் சிரமப்பட்டனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.
ஆபத்தான மின்கம்பம்
திருவையாறு தாலுகா அரசூர் கிராமம் வடக்குதெருவில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமமக்கள், அரசூர்.
குண்டும், குழியுமான சாலை
பாபநாசத்தை அடுத்த ராஜகிரி, நொண்டிமீரா தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையின் மையப்பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளன. இதனால் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்லும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும்.
முகமதுஇக்பால், ராஜகிரி.
Related Tags :
Next Story