சுரண்டை அருகே கள்ள ஓட்டு போடுவதாக புகார்: இருதரப்பினர் மோதல்


சுரண்டை அருகே கள்ள ஓட்டு போடுவதாக புகார்: இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 7 Oct 2021 4:05 AM IST (Updated: 7 Oct 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினர் மோதல்

சுரண்டை:
சுரண்டை அருகே கள்ள ஓட்டு போடுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் கிராம பஞ்சாயத்துக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதன் தலைவர் பதவிக்கு முருகன், ஆண்டபெருமாள் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
சுரண்டை அருகே தெற்கு கழுநீர்குளம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாக்காளர்கள் அங்கு வரிசையில் நின்று கொண்டு இருந்தனர்.
கள்ள ஓட்டு போடுவதாக...
இந்த நிலையில் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடுவதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினார்கள். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, திடீரென்று இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஒருதரப்பைச் சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து காயம் அடைந்தவர்கள் சார்பில் வீரகேரளம்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் தெற்கு கழுநீர் குளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, எங்கள் தரப்பினரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை மறியலில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உங்களது கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story