கிருஷ்ணகிரி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 51 அடியை எட்டியது. பின்னர் மழை குறைவால் நீர்மட்டம் குறைந்த நிலையில், தற்போது கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு 410 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 347 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 707 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 640 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று மதியம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் அணைக்கு 768 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு 177 கன அடியும், தென்பெண்ணை ஆற்றில் இருந்து 591 கன அடி என மொத்தம் 768 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்தோடுவதால், சூளகிரி தாலுகா உலகம் பக்கமுள்ள பண்டபள்ளி, அருகே தென்பெண்ணை ஆற்றுப்பகுதியை பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கரையை கடந்து சென்று வருகிறார்கள். கெலவரப்பள்ளி அணையிலிருந்து உபரிநீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விட்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கரையோரம் நடந்து செல்லக்கூடாது. ஆற்றில் குளிக்கக்கூடாது. கால்நடைகளை அழைத்து செல்லக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். கலெக்டரின் இந்த எச்சரிக்கையை, வருவாய்த்துறையினர், கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story