ஒரே நாளில் 50 மில்லியன் கன அடி அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
செம்பரம்பாக்ம் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் ஏரிக்கு 50 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
பூந்தமல்லி,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானது. இதன் மொத்த உயரம் 24 அடி. 3,645 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். மழை காலத்தில் அணையின் பாதுகாப்பை கருதி 21 அடி நிரம்பியவுடனே உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 2 முறை ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. கிருஷ்ணா நதி நீரால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வந்தது.
நேற்று முன்தினம் காலை முதல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 715 கன அடி நீர் வந்தது. இதனால் ஒரே நாளில் ஏரிக்கு 50 மில்லியன் கன அடி நீர் வந்து சேர்ந்து உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 21.15 அடியாகவும், நீர் இருப்பு 2,895 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. ஏரியில் இருந்து 151 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு பருவ மழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி 21 அடியை எட்டியதும் உபரிநீர் திறந்து விடப்பட்டது. ஆனால் தற்போது பருவமழை பெய்தாலும் ஏரியில் முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் வகையில் நீரை தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story