ஒட்டு பொறிகளை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம்
காய்கறி பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒட்டு பொறிகளை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி
காய்கறி பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒட்டு பொறிகளை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயற்கை விவசாயிகளுக்கு முன்னுரிமை
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், பூண்டு, அவரை, பட்டாணி, காலிபிளவர் போன்ற காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இயற்கை வேளாண்மை மாவட்டமாக நீலகிரியை மாற்ற கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு மானியங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஒட்டு பொறிகள்
தற்போது இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வகையில் காய்கறி பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒட்டு பொறிகள் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொறிகளை பயிர்களின் இலை பரப்புக்கு மேல் இருக்கும்படி பொருத்த வேண்டும். பயிர்களை தாக்கும் பூச்சி இனங்கள் ஒட்டு பொறிகளில் சிக்கிக்கொள்ளும். மேலும் இயற்கை விவசாயத்துக்கு கைகொடுத்து வருகிறது. இதனால் ஒட்டு பொறிகளை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மஞ்சள் நிற ஒட்டும் பொறி வெள்ளை ஈ, இலைப்பேன், அசுவினி, திராட்சை உண்ணி வண்டு, முட்டைகோசு ஈ, சுருள் பூச்சி போன்ற பூச்சிகளை கவரக்கூடியது.
நோய் தாக்காது
நீல நிற ஒட்டும் பொறி இலைப்பேன், முட்டைகோசு ஈ, வெள்ளை நிற ஒட்டும் பொறி, ஆரஞ்சு நிற ஒட்டும் பொறி தத்துப் பூச்சிகள், பச்சை நிற ஒட்டுப் பொறி பழ ஈ, பருத்திக்காய் கூண் வண்டு ஆகிய பூச்சிகளை பிடித்துக் கொள்ளும். காய்கறி தோட்டங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒட்டு பொறிகளை பொருத்தினால், பூச்சிகள் அதில் எளிதாக சிக்கிவிடும். இதனால் காய்கறிப் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், நோய் தாக்காமல் இருக்கும்.
மேலும் ரசாயனங்கள் கலந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது தடுக்கப்படும். இதனால் பூச்சி மருந்து அடிக்க வேண்டிய செலவு மிச்சமாகும். மண்ணில் தாது சத்துக்கள் அழியாமல் இருக்கும். இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளுக்கு தனி மவுசு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story