9 பதற்றமான வாக்குச்சாவடிகள் வீடியோ மூலம் கண்காணிப்பு


9 பதற்றமான வாக்குச்சாவடிகள் வீடியோ மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 7:10 PM IST (Updated: 7 Oct 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலின்போது பதற்றமான வாக்குச்சாவடிகள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலின்போது பதற்றமான வாக்குச்சாவடிகள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.

9 பதற்றமான வாக்குச்சாவடிகள்
 
நீலகிரி மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு வார்டு உறுப்பினர் இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 4-ல் மசினகுடி ஊராட்சியில் உள்ள 6 வாக்குச்சாவடிகள், வார்டு எண் 11-ல் சேரங்கோடு ஊராட்சியில் 3 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 9 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி நீலகிரியில் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று வீடியோ பதிவு மேற்கொள்ளப்படுகிறது. 

வாக்குப்பதிவு எந்திரங்கள்

மேலும் வாக்குப்பதிவு சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க 5 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்காளர்களுக்கு பூத் சீலிப் வழங்கப்பட்டது. சேரங்கோடு, மசினகுடி ஊராட்சிகளில் 24 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சியில் வாக்கு சீட்டு மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, பதிவு செய்வது, கை விரலில் அழியாத மை வைப்பது போன்ற பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் 64 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

பாதுகாப்பு உபகரணங்கள்

வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய 13 வாக்குச்சாவடிகளுக்கு தலா 2 செவிலியர்கள் என மொத்தம் 26 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தலா 2 பணியாளர்கள் கிருமிநாசினி, கையுறை வழங்குவது, பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவுக்கு பின்னர் எந்திரங்கள் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகிறது.

நடுஹட்டி ஊராட்சியில் பதிவான வாக்கு சீட்டுகள் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்படுகிறது. அங்கு 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story