அந்தரத்தில் தொங்கும் பாறைகளால் விபத்து அபாயம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அந்தரத்தில் தொங்கும் பாறைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அந்தரத்தில் தொங்கும் பாறைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
தொடர் மழை
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது.
இது தவிர குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து உள்ளன. இதனை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தரத்தில் பாறைகள்
சாலையில் விழுந்து கிடக்கும் மண் குவியல்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படுகிறது. பாறைகளில் துளையிட்டு துண்டு துண்டாக உடைக்க முயற்சி நடந்தது. ஆனால் அது நடக்கவில்லை. வெடி வைத்து தகர்த்தாலும், ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பாறைகளை உடைத்து அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இது மட்டுமின்றி அந்த சாலையோரத்தில் சில இடங்களில் பாறைகள் அந்தரத்தில் தொங்கி உள்ளன. கே.என்.ஆர். பகுதியில் எப்போது வேண்டுமானாலும் உருண்டு விழும் வகையில் பாறை நிற்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விழுந்த பாறைகள் உடைக்கப்படாமல் அப்படியே ஓரத்தில் கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது. எனவே அந்த பாறைகளை உடனடியாக உடைத்து அகற்ற வேண்டும்.
இல்லையென்றால் வெள்ளை நிற வர்ணம் பூச தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள பாறைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story