தூத்துக்குடியில் கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணையை தயாரித்து வாலிபரிடம் மோசடி 3 பேர் கைது
தூத்துக்குடியில் கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணையை தயாரித்து வாலிபரிடம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்து வாலிபரிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோசடி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் ரமேஷ் (வயது 31). இவரிடம், காயாமொழி வள்ளுவர் நகரை சேர்ந்த முருகபெருமாள் மகன் திருமால் (31), குதிரைமொழி கரிசன்விளையை சேர்ந்த கணேசன் (53), அவரது மனைவி பார்வதி (51) ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர். இதற்காக முன்பணமாக ரமேசிடம் இருந்து ரூ.2½ லட்சம் வாங்கி உள்ளனர். பின்னர் அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கி உள்ளனர்.
அந்த பணி நியமன ஆணையை பார்த்த ரமேஷ், அது போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் திருமால் உள்ளிட்ட 3 பேரிடமும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால், அவர்கள் பணத்தை கொடுக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
இதுகுறித்து ரமேஷ் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். உடனே அவர், மனு மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரேமானந்தன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாந்தி, அப்பாத்துரை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று திருமால், கணேசன், பார்வதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
பரபரப்பு தகவல்
போலீசார் விசாரணையில், அவர்கள் கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கிய பரபரப்பு தகவல் தெரியவந்தது. இதேபோன்று வேறு சிலரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக, முன்னாள் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் வழங்குவது போன்று போலி நியமன ஆணை தயாரித்து அரசு முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளளது.
Related Tags :
Next Story