குடிபோதையில் ரகளை; தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து


குடிபோதையில் ரகளை; தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 7 Oct 2021 10:55 PM IST (Updated: 7 Oct 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே குடிபோதையில் சாலையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்காடு:
சீர்காழி அருகே குடிபோதையில் சாலையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் ரகளை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 32). திருவாரூர் மாவட்டம் எடையூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்த இவர், தற்போது கடற்கரை போலீஸ் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விடுமுறையில் உள்ள சக்திவேல் தனது சொந்த ஊரான காத்திருப்பு கிராமத்தில் தங்கி உள்ளார். 
நேற்று முன்தினம் மாலை காத்திருப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் குடிபோதையில் சில வாலிபர்கள் ரகளை செய்து கொண்டிருந்தனர். அவர்களை சக்திவேல் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். 
கத்திக்குத்து
இதை தொடர்ந்து சக்திவேல் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேலின் கை மற்றும் மார்பில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
4 பேர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் சக்திவேலை கத்தியால் குத்தியதாக செம்பனார்கோவில் அருகே உள்ள திருச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்த அருள்(28), ரமேஷ்(26), தட்சிணாமூர்த்தி(23), சதீஷ்(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 
இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story