19 நாட்களாக கிணற்றுக்குள் தவிப்பு: டிரோன் மூலம் தேடப்பட்ட நாய் மீட்பு


19 நாட்களாக கிணற்றுக்குள் தவிப்பு:  டிரோன் மூலம் தேடப்பட்ட நாய் மீட்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 5:46 PM GMT (Updated: 7 Oct 2021 5:46 PM GMT)

டிரோன் மூலம் தேடப்பட்ட நாய் மீட்கப்பட்டது.

பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டி பட்டியில் கடந்த மாதம் 18-ந்தேதி ஆசிரியர் செல்வின் அன்பரசு என்பவரின் வளர்ப்பு நாய் (ஜெர்மன் ஷெப்பர்ட்) அப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதில் வெளியில் சென்றது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் நாய் கிடைக்கவில்லை. மேலும் டிரோன் கேமரா உதவியுடள் காட்டுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் வெள்ளையாண்டிப்பட்டி பகுதியில் உள்ள தண்ணீரில்லா கிணற்றின் அருகே அழகம்பெருமாள் என்பவர் ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் இருந்து நாய் கத்தும் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் பார்த்த போது கிணற்றில் பரிதாபமாக நாய் கிடந்தது. இதுகுறித்து ஊர்பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் உதவியுடள் கிணற்றில் இறங்கி நாயை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அதற்கு உணவு கொடுத்தனர். இதையடுத்து நாயின் உரிமையாளரிடம் நாய் ஒப்படைக்கப்பட்டது. 19 நாட்களுக்கு பின் காணாமல் போன நாய் கிடைத்ததால் ஆசிரியரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story