காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 Oct 2021 11:34 PM IST (Updated: 7 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

குருபரப்பள்ளி:
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சிகானப்பள்ளி நரசிம்ம சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் சத்தியவதி (வயது 19). இவர் பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பையனப்பள்ளி பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்து வந்தார். 
இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாணவி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மாணவி சத்தியவதி வீட்டில் இருந்து ெவளியே சென்றவர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
கிணற்றில் குதித்து தற்கொலை
இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் மாணவி பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story