திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கொள்கலன்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் திறக்கப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் திறக்கப்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி
கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. முதல் அலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. 2-வது அலையில் கொரோனா பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பலர் பலியாகவும் செய்தனர். இதன் காரணமாக ஆக்சிஜன் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதற்கிடையே தற்போது வரை கொரோனா தொற்று முழுமையாக குறையவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு நிதி உதவியுடன் நாடு முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் அமைக்கப்பட்டது. இதனை நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர்
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கொள்கலனை கலெக்டர் வினீத் தொடங்கிவைத்து பார்வையிட்டார். இந்த ஆக்சிஜன் உற்பத்தி கொள்கலன் தானாக கிடைக்கிற ஆக்சிஜனை சேகரிக்கும். ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம் 200 நோயாளிகளுக்கு மேல் ஆக்சிஜன் கொடுக்க முடியும். கொரோனா நோயாளிகள் மற்றும் ஆக்சிஜன் தேவைப்படுகிறவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி டீன் முருகேசன், கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அலுவலர் பாரதி, உதவி மருத்துவ அலுவலர்கள் வினோத், செந்தில்குமார், மயக்கவியல்துறை தலைவர் பூங்குழலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story