2-ம் கட்ட தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் காலை 7 மணிக்கே மண்டல அலுவலர்கள் தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் பயிற்சி நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு 4 வகையான வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை முந்தைய நாள் இரவே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் யாரேனும் பணிக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது பணியின்போது எவருக்கேனும் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்படின் உடனடியாக அவருக்கு பதிலாக மாற்று அலுவலரை நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு அன்று 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பார்வையிட்டு வாக்குப்பதிவின் முன்னேற்றம், முக்கியமான நிகழ்வுகள் குறித்தும் அறிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் உடனே அருகில் உள்ள நடமாடும் போலீஸ் குழுவிற்கு தகவல் அளித்துவிட்டு பின்னர் ஊராட்சி ஒன்றியத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story