தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோய்வாய்ப்பட்ட தெருநாய்
திண்டுக்கல் நெட்டுத்தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் தனியாக செல்பவர்களை துரத்திச்சென்று தெருநாய்கள் கடிக்கின்றன. இந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட ஒரு தெருநாய் கழுத்தில் புண்களுடன் நெட்டுத்தெருவில் வலம் வருகிறது. அது தெருவுக்குள் நுழையும் போதே ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே நோய்வாய்ப்பட்ட தெருநாயை பிடித்து சிகிச்சை கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகாராஜன், திண்டுக்கல்.
பழுதான தெருவிளக்குகள்
ஆத்தூர் தாலுகா வீரக்கல் பிரிவு முதல் வீ.கூத்தம்பட்டி வரை சாலையில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அந்த சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் அந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அப்போது தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புகழேந்தி, வீ.கூத்தம்பட்டி.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரோடு அரண்மனைகுளம் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதிக வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாந்த், நாகல்நகர்.
சகதி காடாக மாறும் சாலை
பழனியை அடுத்த மானூர் 9-வது வார்டில் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் இங்குள்ள தெருக்களில் மழைநீர் தேங்குவதால் சகதி காடாக மாறி விடுகிறது. மேலும் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் சாலையோரங்களை குப்பைகள் கொட்டும் இடமாக சிலர் பயன்படுத்துகின்றனர். எனவே எங்கள் பகுதியில் தார்சாலை அமைப்பதுடன், குப்பை தொட்டிகள் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆஸ்மி, மானூர்.
தெருவிளக்குகள் எரியுமா?
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அண்ணா காலனியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அண்ணா காலனியில் பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- அபிநயா, அண்ணாகாலனி.
Related Tags :
Next Story