ஆயுதபூஜை விற்பனைக்காக பூத்து குலுங்கும் செண்டுமல்லி
முத்தூர் அருகே மேட்டாங்காட்டுவலசு பகுதிகளில் ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தயாராகி பூத்து குலுங்குகின்றன.
முத்தூர்
முத்தூர் அருகே மேட்டாங்காட்டுவலசு பகுதிகளில் ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தயாராகி பூத்து குலுங்குகின்றன.
செண்டுமல்லி
முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விவசாயம் பிரதானமாகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டு தோறும் ஜனவரி, ஆகஸ்டு மாதங்களில் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல், மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசு சுற்றுவட்டார விவசாயிகள் ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் அதிகளவு சாகுபடி செய்து உள்ளனர்.ஆயுத பூஜை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதுபற்றி செண்டுமல்லி சாகுபடி விவசாயி வி.ஆனந்தன் கூறியதாவது:-
விற்பனை
ஒரு ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்ய உழவு கூலி, பார் கட்டுதல், நாற்று நடுதல், களை மேலாண்மை, உர மேலாண்மை கடைபிடித்தல் என 2 சாகுபடிக்கும் சேர்த்து ரூ.30 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளோம். செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தற்போது நன்கு வளர்ந்து பூத்து குலுங்குகின்றன. பூக்களை ஆயுதபூஜைக்கு 4 நாட்களுக்கு முன்பு பறித்து திருப்பூர், கோவை ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விடுவோம். மேலும் இந்த பகுதிகளில் ஆயுதபூஜை நாளில் விற்பனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டாங்காட்டுவலசு கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தற்போது நன்கு வண்ணமயமாக பூத்து, குலுங்கி காண்போர் மனதை பரவசப் படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story