திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில்  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 Oct 2021 1:16 AM IST (Updated: 8 Oct 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு, இரவாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

திருப்பத்தூர் ஒன்றிய வாக்குகள் குருசிலாப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கந்திலி ஒன்றிய வாக்குகள் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது. இங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், ஜோலார்பேட்டையை அடுத்த அக்ராகரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதனால் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், வாக்குப்பெட்டிகளுடன் அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, தனி அறையில் வைத்து நேற்று காலை மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.  அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் விநாயகம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் உள்பட வேட்பாளர்கள் உடனிருந்தனர்.

இதேபோல நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் நாட்டறம்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனி அறையில் வைக்கப்பட்டு  நாட்டறம்பள்ளி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் தினகரன் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது வேட்பாளர்கள் உடனிருந்தனர்.

கலெக்டர் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில்  துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story