புதுச்சத்திரம் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்து மளிகை கடையில் திருட முயற்சி-ஜாமீனில் வெளியே வந்தவர் கைது


புதுச்சத்திரம் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்து மளிகை கடையில் திருட முயற்சி-ஜாமீனில் வெளியே வந்தவர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2021 1:16 AM IST (Updated: 8 Oct 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே ஏளூரில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்து மளிகை கடையில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்:
திருட முயற்சி
புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூரை சேர்ந்தவர் பெருமாள். இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 1 மணிக்கு கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தான் உணவு பாதுகாப்பு அதிகாரி என்றும், கடையில் ஆய்வு செய்ய வந்திருப்பதாகவும் கூறி நடித்தார். இதனை உண்மை என பெருமாள் நம்பி, கடையை சோதனை செய்ய அனுமதித்தார்.
அப்போது அந்த வாலிபர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? என கேட்டுக்கொண்டு அங்கிருந்த பொருட்களை கலைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து திருட முயன்றார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெருமாள், அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். மேலும் கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளுடன் நின்ற நபரை சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் பிடித்தனர்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்தவர் பள்ளிபாளையம் சின்ன வீதி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (வயது 27) என்பது தெரிந்தது.
இவர் மீது நாமக்கல் மற்றும் பள்ளிபாளையம் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததும் தெரிந்தது. மேலும், வெள்ளித்திருப்பூர், கவுந்தப்பாடி மற்றும் தொட்டியம் பகுதிகளில் அரசு அதிகாரி எனக்கூறி திருட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட மற்றொரு வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story