சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.க. தான் காரணம்; பழனியில் எச்.ராஜா பேட்டி


சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.க. தான் காரணம்; பழனியில் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2021 1:19 AM IST (Updated: 8 Oct 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று பழனியில் எச்.ராஜா கூறினாா்.

பழனி:
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று பழனியில் எச்.ராஜா கூறினாா்.
ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதவிநாயகர் கோவில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன், தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் உள்பட  பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் ் இருந்து பா.ஜ.க.வினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருட முயற்சி
பின்னர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
வார இறுதி நாட்களில் கோவில்களை திறந்தால் கொரோனா பரவும் என்று கூறுவது வேடிக்கையானது. ஏனெனில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க.வினரே கோவில் நிலங்களை அதிகளவில் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 55 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது தமிழக கோவில் நகைகளை தங்ககட்டிகளாக மாற்றும் திட்டம் கோவில் நகைகளை திருடுவதற்கான முயற்சியே.
பழனி முருகன் கோவில் உள்பட தமிழகத்தின் பல கோவில்களில் பாலாலய பூஜை மட்டும் நடத்திவிட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் பல கோவில்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. இது அங்குள்ள சிலை, நகை உள்ளிட்டவற்றை திருட திட்டமிட்டு நடக்கும் வேலையாகும். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், தி.மு.க.வும் தான் காரணம். இவர்கள் தான் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல்-டீசல் விலையை கொண்டுவர மறுத்தார்கள்.
பொய் குற்றச்சாட்டு
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் வருந்தத்தக்கது. அதேவேளையில் அங்கு மத்திய மந்திரி, அவரது மகன் இல்லை. எனவே அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்துவது தவறு. இதுபற்றி மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. அதன்முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story