தஞ்சை மாவட்டத்தில் 195 புயல் நிவாரண மையங்கள் தயார்
வடகிழக்குப்பருவமழையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 195 புயல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி கூறினார்.
தஞ்சாவூர்:
வடகிழக்குப்பருவமழையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 195 புயல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்குப்பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திரரெட்டி, மாவட்ட கண்காணிப்பு மற்றும் அரசு முதன்மைசெயலாளர் விஜயராஜ்குமார், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னதாக இவர்கள் திருவையாறு அருகே உள்ள கோணக்கடுங்கலாற்றில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் நாகத்தி, வெள்ளாம்பபெரம்பூரில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 960 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிவாரண மையங்கள்
பின்னர் பணீந்திரரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்குப்பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 195 இடங்களில் புயல் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் 1,169 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
இதே போல் நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 1,069 கி.மீ. நீளத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளது. போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் நகராட்சி, உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வானிலை மையம் அவ்வப்போது விடுக்கும் அறிக்கையை பொருத்து தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கரை திரும்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதே போன்று விவசாயிகளும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்களை பின்பற்றி உரிய வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), பயிற்சி கலெக்டர் கவுசிக் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story