சேலம் டாக்டரிடம் ரூ.23¼ லட்சம் மோசடி
சேலம் டாக்டரிடம் ரூ.23¼ லட்சம் மோசடி
சேலம், அக்.8-
தங்கம், வைரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற போலி அறிவிப்பை நம்பிய சேலம் டாக்டரிடம் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 485 மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர்
சேலம் ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 42). இவர் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அவருடைய செல்போன் எண் வாட்ஸ்அப்பில் கடந்த ஆகஸ்டு மாதம் தகவல் ஒன்று வந்தது. அதில், தங்கம் மற்றும் வைரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், அதற்காக கொடுக்கப்பட்ட செயலியை டவுன்லோடு செய்து பணம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதை உண்மை என நம்பிய ஜெகதீசன் அந்த செயலியை டவுன்லோடு செய்தார்.
மேலும் அந்த ெசயலியில் இருந்த பல்வேறு வங்கி கணக்கு எண்களில் இருந்து ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 485 செலுத்தினார். ஆனால் அவருக்கு பணம் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெகதீசன் வாட்ஸ் அப்பில் தகவல் வந்த எண்ணை தொடர்பு கொண்டு செலுத்திய பணத்தை திரும்ப கேட்டார். அப்போது பேசிய மர்ம நபர், பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றால் மேலும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றார்.
அதன்பிறகுதான் தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீசன் இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த மோசடி குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் கடை உரிமையாளர்
சேலம் அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (27). இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைக்கு தேவையான உதிரிபாகங்களை வாங்குவதற்காக தனியார் ஆன்லைன் விற்பனை நிலையத்தில் ஆர்டர் செய்தார். இதற்காக ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 650 செலுத்தினார்.
ஆனால் அவருக்கு செல்போன் உதிரிபாகங்கள் வரவில்லை. செலுத்திய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இந்த மோசடி குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story