பண்ருட்டி தர்கா நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு
பண்ருட்டி தர்கா நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக வக்பு வாரிய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி காந்தி ரோட்டில் பெரிய தர்கா என்று அழைக்கப்படும் ஹஜரத் நூர்முகம்மதுஷா அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமாக பண்ருட்டி வட கைலாசம், கணிசப்பாக்கம், வீரமங்கலம், பனப்பாக்கம், புலவனூர், திருவதிகை, சிறுவத்தூர், அங்கு செட்டிப்பாளையம், மேல்கவரப்பட்டு ஆகிய இடங்களில் 162 ஏக்கர் நிலமும், பண்ருட்டி காந்தி ரோடு, கடலூர் ரோடு, ஜவகர் தெரு, சென்னை சாலை ஆகிய இடங்களில் 120 கடைகள் மற்றும் கட்டிடங்கள், வீடுகள் ஆகியவை உள்ளன. கடந்த 14 ஆண்டு காலமாக இந்த தர்காவின் நிர்வாகத்தை அ.தி.மு.க.வை சேர்ந்த தாஜுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நிர்வகித்து வந்தனர்.
நிர்வாக குழு தற்காலிக நீக்கம்
இந்த நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பண்ருட்டியை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம்கள் சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வக்பு வாரியம் தாஜுதீன் தலைமையிலான 6 பேர் கொண்ட நிர்வாக குழுவை தற்காலிகமாக நீக்கம் செய்தது. மேலும் தர்கா நிர்வாக தனி அலுவலராக அப்துல்லா என்பவரை வக்பு வாரியம் நியமித்தது.
வக்பு வாரிய குழு விசாரணை
இதன் தொடர்ச்சியாக முறைகேடு புகார் குறித்து விசாரிப்பதற்காக வக்பு வாரிய உறுப்பினர்கள் அப்துல் சமது எம்.எல்.ஏ., நாகை ஷாநவாஸ் எம்.எல்.ஏ., பாத்திமா முசாபர், வக்கீல் எம்.கே.கான் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை பண்ருட்டி தர்கா அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள், புகார் கூறியவர்கள் மற்றும் தாஜீதீன் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவினரிடமும் விசாரணை நடத்தினர்.
நடவடிக்கை
பின்னர் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட நிலங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை விசாரணைக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். இது குறித்து அப்துல் சமது எம்.எல்.ஏ. கூறுகையில், பண்ருட்டி தர்கா நிர்வாகத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உள்ளோம். விசாரணை அறிக்கையை வக்பு வாரியத்திடம் சமர்பிப்போம். அதன்பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது வக்பு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
Related Tags :
Next Story