கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போல குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்கக்கூடாது என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
பொன்.ராதாகிருஷ்ணன்
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன்,
முன்னாள் மாவட்ட தலைவர்கள் முத்துகிருஷ்ணன், கணேசன், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், எஸ்.எஸ்.மணி, சிவகுமார், தேவ், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில் "இந்துக்களின் புனித நாளான வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதனால் பழைய காலத்தில் நடைபெற்ற கோவில் போராட்டங்களை போல தற்போதும் போராட்டம் நடந்துள்ளது. இந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி ஞாயிற்றுக்கிழமை நாகராஜா கோவில் வழிபாடு, புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு, ஆடி வெள்ளிக்கிழமை கஞ்சி ஊற்றுவது போன்ற அனைத்து வழிபாடும் தடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
பலத்த பாதுகாப்பு
ஆர்ப்பாட்டத்தையொட்டி பாதுகாப்பு காரணமாக நாகராஜா கோவிலுக்கு வரும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. அந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story