2 குழந்தைகள் பிறந்து இறந்த நிலையில் 8 மாத கர்ப்பிணி தற்கொலை


2 குழந்தைகள் பிறந்து இறந்த நிலையில் 8 மாத கர்ப்பிணி தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2021 3:07 AM IST (Updated: 8 Oct 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

2 குழந்தைகள் பிறந்து இறந்த நிலையில் 3-வது குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சத்தில் 8 மாத கர்ப்பிணி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹாசன்:

3-வது முறையாக கர்ப்பம்

  மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டை தாலுகா சாசலு கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ராஜபுரா கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

  ஷில்பாவுக்கு ஏற்கனவே 2 முறை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அந்த குழந்தைகள் பிறந்து 17 நாட்களுக்குள் அவை உயிரிழந்தன. இதனால் ஷில்பா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் ஷில்பா 3-வது முறையாக கர்ப்பமானார்.

தற்கொலை

  ஏற்கனவே 2 முறை குழந்தை பிறந்து இறந்து விட்டதால், 3-வதாக பிறக்கப்போகும் குழந்தையும் இறந்து விடுமோ என்று ஷில்பா மனமுடைந்து காணப்பட்டு வந்தார். மேலும் தனது கணவர் மற்றும் உறவினர்களிடமும் இதுபற்றி கூறி வருத்தப்பட்டார். இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷில்பா, வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்து இருக்குமோ என்று கவலைப்பட்டு கொண்டிருந்தார்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று காலை ஷில்பா, தூக்கில் தொங்குவதை பார்த்து மல்லிகார்ஜூன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் இரேசாவே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். பின்னர் போலீசார் ஷில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 குழந்தைகள் ஏற்கனவே பிறந்து இறந்த நிலையில், 3-வது குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சத்தில் ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

  இதுகுறித்து இரேசாவே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story