நாளை 2-வது கட்ட தேர்தல்: 4 ஒன்றியங்களில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் நெல்லை சூப்பிரண்டு மணிவண்ணன் பேட்டி
நாளை 2வது கட்ட தேர்தல் 4 ஒன்றியங்களில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் நெல்லை சூப்பிரண்டு மணிவண்ணன் பேட்டி
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் நாளை நடைபெறும் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.
2-வது கட்ட தேர்தல்
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பை ஆகிய 5 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
2-வது கட்டமாக நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 4 ஒன்றியங்களில் நாளை (சனிக்கிழமை) ேதர்தல் நடைபெறுகிறது.
இந்த வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கான முகாம் நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். மேலும் போலீசார் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களையும் பார்வையிட்டார். அந்தந்த ஒன்றியங்களுக்கு சென்று மண்டல தேர்தல் அலுவலர்களுடன் சேர்ந்து செல்லும் போலீசார் மற்றும் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் போலீசாருக்கு தனித்தனியாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
2 ஆயிரம் போலீசார்
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று உள்ளது. நாளை (சனிக்கிழமை) 4 ஒன்றியங்களில் 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 12 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மாவட்டத்தில் 561 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் 70 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வழக்கமாக நியமிக்கப்பட்டிருக்கும் போலீசாருடன், கூடுதலாக 4 சிறப்பு போலீசார் பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story