நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு
நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு நடைபெற்றது.
அரியலூர்:
கொலு வைத்து வழிபாடு
அரியலூர் நகரில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று முன்தினம் நவராத்திரி விழா தொடங்கியது. ஆனால் சில கோவில்களில் கொலு வைக்கப்படவில்லை. சில கோவில்களில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படவில்லை. நவராத்திரி விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடத்தப்படும் நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு உத்தரவின்படி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களில் நடை சாத்தப்படும் என்பதால், பல கோவில்களில் நவராத்திரி விழா களை இழந்தது.
வீடுகளில் பக்தர்கள் கொலு வைத்து வழிபடுகின்றனர். நேற்று குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கஜலெட்சுமி அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்தும், மேலத் தெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் விவசாய பெண் வேடத்தில் தலையில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்வது போன்ற அலங்காரத்திலும், மேளக்காரத்தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் அம்மன் அன்னலட்சுமி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆண்டிமடம், தா.பழூர்
ஆண்டிமடத்தில் உள்ள தர்மசம்வர்த்தினி உடனுறை மேல அகத்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கோவிலில் கொலு அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. 2-ம் நாளான நேற்று தர்மசம்வர்த்தினி அம்மன், அகத்தீஸ்வரர் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தேவி துதி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி வழிபாடு நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட உற்சவ தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு பூஜை செய்து வழிபடும் பக்தை திருக்கோலத்தில் விசாலாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். அம்பாள் அஸ்ட்டோத்ரம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது. பஞ்ச ஆரத்தி நடைபெற்றபோது பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பினர். மேலும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு முகக்கவசம் அணிந்து பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பூஜைகளில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story