தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல் கார்-மோட்டார் சைக்கிள் சேதம்; 6 பேர் மீது வழக்கு


தேர்தல் பிரசாரத்தில்  தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல் கார்-மோட்டார் சைக்கிள் சேதம்; 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Oct 2021 3:40 AM IST (Updated: 8 Oct 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.அ.தி.மு.க.வினர் மோதல் கார்-மோட்டார் சைக்கிள் சேதம் 6 பேர் மீது வழக்கு

திசையன்விளை:
திசையன்விளையில் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் கார், மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறுதிக்கட்ட பிரசாரம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியில் அரசியல் கட்சியினர் நேற்று மாலையில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர்.
திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெ.கீதாஜீவன், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தனர். அப்போது அங்கு அ.தி.மு.க.வினரும் பிரசாரம் செய்ததால், இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. உடனே போலீசார் விரைந்து சென்று, இரு கட்சியினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல்
பின்னர் அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் கார்களில் திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திசையன்விளை தனியார் ஆஸ்பத்திரி அருகில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியினர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையே அமைச்சர்கள் சென்ற கார்கள் அந்த வழியாக சென்றபோது, சிலர் திடீரென்று கார்களை வழிமறித்து தாக்க முயன்றனர்.
இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஒரு கார், மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 
அ.தி.மு.க. பிரமுகர் உள்பட   6 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த நல்லக்கண்ணு திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், அமைச்சர்களின் கார்களை வழிமறித்து தாக்கி, கொலைமிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க. பிரமுகரான திசையன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.எம்.கண்ணன், அவருடைய மகன் கியூபர்ட் மற்றும் அரிகிருஷ்ணன், டென்னிஸ் உள்பட 6 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளையில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
..........

Next Story