சீன நாட்டு பானை ஓடுகள் கண்டெடுப்பு
அரசுப்பள்ளி வளாகத்தில் சீன நாட்டு பானை ஓடுகள் கண்டெடுப்பு
ராமநாதபுரம்
தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து அவற்றைப் பாதுகாக்க, 2010 முதல் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் மூலம் பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் மாணவர்கள் அறிந்துள்ளனர். இந்நிலையில் பள்ளியில் குடிநீர் தொட்டி கட்ட பள்ளம் தோண்டிய இடத்தில் சீனநாட்டுப் பானை ஓடுகள், கருப்பு. சிவப்பு பானை ஓடுகள், மான் கொம்புஉடைந்த பகுதிகள் ஆகியவற்றை 10-ம் வகுப்பு மாணவர்கள் மனோஜ், பிரவினா, டோனிகா, பாத்திமா ஷிபா ஆகியோர் கண்டெடுத்து அவற்றை மன்றச் செயலாளரும் தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுருவிடம் கொடுத்தனர். இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது:-
போர்சலைன், செலடன் ஆகிய இருவகை சீனநாட்டுப் பானை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன. இதில் போர்சலின் ஓடுகளில் வெள்ளையில் சிவப்பு, கரும்பச்சை நிறத்தில் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. செலடன் வகை மண்பாண்டங்களில் இளம்பச்சை நிறத்தில் ஒரு ஓடு கிடைத்துள்ளது. கருப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகளில் கைவிரல் நகத்தால் உருவாக்கப்பட்ட அழகிய வடிவங்கள் உள்ளன. இவை சீனநாட்டு வணிகர்களின் வருகைக்கு ஆதாரமாக உள்ளன. இங்கு கிடைத்த மானின் உடைந்த கொம்புகள் கி.பி.12-13-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story