நடைபாதையில் தூங்கிய டிரைவர் மீது கார் ஏறி இறங்கியதால் சாவு


நடைபாதையில் தூங்கிய டிரைவர் மீது கார் ஏறி இறங்கியதால் சாவு
x
தினத்தந்தி 8 Oct 2021 6:42 AM IST (Updated: 8 Oct 2021 6:42 AM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் தகராறில் வீட்டை விட்டு வெளியேறி நடைபாதையில் தூங்கிய டிரைவர் மீது கார் ஏறி இறங்கியதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சன்னதி தெருவில் கடந்த 4-ந்தேதி நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு மயிலாப்பூர் போலீசார் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலீசார், காயம் அடைந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஏழுமலை (வயது 45) என்பது தெரியவந்தது. 

தனது மனைவி ஆனந்தியுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஏழுமலை, சென்னையில் நடைபாதையில் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த ஏழுமலை மீது ஒரு கார் ஏறி இறங்கி விட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. விபத்து அதிகாலை நடந்துள்ளதால் இதுகுறித்து யாருக்கும் தெரியவில்லை.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை, சிகிச்சை பலனின்றி மறுநாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரையும், டிரைவரையும் தேடி வருகின்றனர்.

Next Story