மாநகர பஸ் டிரைவருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதம் - பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்
படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவர்களை உள்ளே ஏறி வரும்படி கூறியதால் மாநகர பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதை கண்டித்து மாநகர பஸ்களை ஆங்காங்கே நிறுத்திய அதன் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை தியாகராயநகரில் இருந்து வேளச்சேரி வழியாக திருவான்மியூர் நோக்கி செல்லும் மாநகர பஸ் சைதாப்பேட்டை நீதிமன்ற நிறுத்தத்தில் நின்றது. அதில் சின்னமலை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் ஏறினார்கள். அவர்கள், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பஸ் டிரைவர் ஏழுமலை, படிக்கட்டில் நின்ற மாணவர்களை பஸ்சின் உள்ளே ஏறி வரும்படி கூறினார். ஆனால் அவர்கள் கேட்காததால், கிண்டி ரேஸ்கோர்ஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திய டிரைவர், மாணவர்களை பஸ்சுக்குள் வரும்படி மீண்டும் கூறினார். இதனால் டிரைவருடன், மாணவர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஏழுமலையை கீழே தள்ளிவிட்டு அடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது. பயணிகள் கூடியதால் மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதை கண்டித்து பின்னால் வந்த மாநகர பஸ்களை ஆங்காங்கே நிறுத்திய அதன் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசார், பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிரைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து டிரைவர்கள், போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பஸ்களை இயக்கினர். இந்த சம்பவத்தால் கிண்டியில் அரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story