கும்மிடிப்பூண்டி-ரெட்டம்பேடு சாலையில் கழிவுநீரை அகற்றக்கோரி வக்கீல்கள் மறியல்
கும்மிடிப்பூண்டி-ரெட்டம்பேடு சாலையில் தேங்கிநிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி வக்கீல்கள் மறியல் ஈடுப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ரெட்டம்பேடு சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம், போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மகளிர் போலீஸ் நிலையம், கோர்ட்டு மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.மேற்கண்ட அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு ரெட்டம்பேடு சாலையை கடந்து தான் அனைவரும் செல்ல வேண்டும். இந்த ரெட்டம்பேடு சாலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் முறையாக பணி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மழைக்காலங்களில் பாதியில் நிற்கும் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழை நீரும் சேர்ந்து ரெட்டம்பேடு சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கிறது. அனைத்து அரசு துறை அலுவலக அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களது அன்றாட தேவைகளுக்கு இந்த சாலையை கடந்துதான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரெட்டம்பேடு சாலையில், மழைநீருடன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி அதற்கு உரிய நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வக்கீல்கள் சங்கத்தின் சார்பாக கோர்ட்டு அருகே திடீர் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. வக்கீல் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு வக்கீல் வேலு முன்னிலை வகித்தார். இதில் 40-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.
பின்னர், பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா மற்றும் போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு தங்களது ½ மணி நேர சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு வக்கீல்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story