உள்ளாட்சி தேர்தல் பணி அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தபால் ஓட்டு வழங்காததை கண்டித்து மறியல்


உள்ளாட்சி தேர்தல் பணி அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தபால் ஓட்டு வழங்காததை கண்டித்து மறியல்
x

உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தபால் ஓட்டு வழங்காததை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் பணி புரிந்தனர். தேர்தலில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்த அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க தபால் ஓட்டு இல்லை என வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியுள்ளார்.

இது குறித்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட சென்ற அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தபால் ஓட்டு போட அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தும், உரிய முறையில் பதிலளிக்காத வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் வாலாஜாபாத் ஒன்றியத்தில் பணிபுரியும் அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபாத்- ஒரகடம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை சமாதானப்படுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.

Next Story