தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.26 கோடி கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.26 கோடி கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2021 5:34 PM IST (Updated: 8 Oct 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.26 கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.26 கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இலங்கைக்கு அருகே உள்ள தமிழகத்தின் பிற கடற்கரை பகுதிகளை கடத்தல் தளமாக பயன்படுத்தி வந்த கடத்தல்காரர்களின் பார்வை தற்போது தூத்துக்குடி மீது பதிந்து உள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல் படையினர், உளவுப்பிரிவு போலீசாரும் கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் பல முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள தூத்துக்குடி பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் கண்காணிப்பை மீறி கடத்தல்காரர்கள் சாதாரணமாக தங்கள் கடத்தல் தொழிலை செய்து வருகின்றனர்.

ரூ.26 கோடி கஞ்சா

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வில்லியம் பெஞ்சமின் மற்றும் போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தருவைகுளம் அருகே உள்ள சந்தியாகப்பர் கோவில் பகுதி கடற்கரையில் பெரில் என்ற நாட்டுப்படகு நின்று கொண்டு இருந்தது. உடனடியாக போலீசார் சென்று அந்த படகில் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த படகில் 15 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 15 மூட்டைகளில் இருந்த 530 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.26 கோடி என்று கூறப்படுகிறது.

4 பேர் கைது

இதையடுத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி பிச்சை (வயது 41), லெனிஸ்டன் (48), ஜெயஸ்டன் (37), ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த செல்வராஜ் (25) ஆகிய 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், கைதானவர்கள் நேற்று முன்தினம் தருவைகுளத்துக்கும், வேம்பாருக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து கஞ்சாவுடன் படகில் இலங்கை நோக்கி புறப்பட்டு உள்ளனர். ஆனால் கடலில் பலத்த காற்று வீசியதால், அவர்களால் தொடர்ந்து படகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் மீண்டும் கரைக்கு திரும்பி வந்து உள்ளனர். அவர்கள் தருவைகுளம் கடற்கரை பகுதியில் கரைசேர்ந்தபோது பிடிபட்டது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு கியூ பிரிவு போலீசார், கைதானவர்களையும், பறிமுதல் செய்த கஞ்சாவையும் தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story