இன்று ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்ற வாக்குப்பெட்டிகள்


இன்று ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்ற வாக்குப்பெட்டிகள்
x
தினத்தந்தி 8 Oct 2021 5:58 PM IST (Updated: 8 Oct 2021 5:58 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.

தேனி:
தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் 9 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் பிச்சம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், அழகர்நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வீதம் மட்டுமே போட்டியிட்டனர். இதனால், அந்த 4 பதவிகளுக்கும் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஆண்டிப்பட்டி ஒன்றிய 19-வது வார்டு கவுன்சிலர், கடமலை-மயிலை ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர், கதிர்நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர், ராஜதானி, நாகலாபுரம் ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் என மொத்தம் 5 பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமும், மற்ற பதவிகளுக்கு வாக்குச்சீட்டுகள் மூலமும் தேர்தல் நடக்கிறது.
வாக்குப்பெட்டிகள்
இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் நேற்று பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாக்குப்பெட்டிகள் ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, போடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
காலியாக உள்ள 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வார்டுகளில் மொத்தம் 9 ஆயிரத்து 318 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு 17 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் 1,802 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜதானி, நாகலாபுரத்தில் தலா ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ராஜதானியில் 460 வாக்காளர்களும், நாகலாபுரத்தில் 365 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
பொது விடுமுறை
இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளுக்கு இன்று பொது விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் முரளிதரன் அறிவித்துள்ளார். அதன்படி கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, நாகலாபுரம், ஆண்டிப்பட்டி ஒன்றிய 19-வது வார்டுக்கு உட்பட்ட ராஜக்காள்பட்டி, தெப்பம்பட்டி, கடமலை-மயிலை ஒன்றிய 8-வது வார்டுக்கு உட்பட்ட முத்தாலம்பாறை, நரியூத்து ஆகிய ஊராட்சிகளுக்கு இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

Next Story