பண்ருட்டி ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா; அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 பேர் கைது ரூ.55 ஆயிரம் பறிமுதல்
பண்ருட்டி ஒன்றியத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுப்பேட்டை,
ஊரக உள்ளாட்சி தேர்தல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் நத்தம் 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தம், சிறுகிராமம் ஆகிய கிராமங்களில் சிலர் ஓட்டு போட வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அ.தி.மு.க.வினர் 3 பேர் கைது
அதன்அடிப்படையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி ஆகியோர் சிறுகிராமம், நத்தம் ஆகிய கிராமங்களுக்கு விரைந்து சென்று வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா? என கண்காணித்தனர்.
அப்போது அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சியின் நிர்வாகிகள் பழனிவேல், காசிநாதன், ராமலிங்கம் ஆகிய 3 பேர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story