கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடக்கிறது 441 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை 441 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 7-ந் தேதி வரை மாவட்டத்தில் மொத்தம் 6,30,392 நபர்களுக்கு முதல் தவணையும், 1,61,385 நபர்களுக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 7,91,777 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 56.8 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் 733 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 619 பேரில் 162 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிறப்பு தடுப்பூசி முகாம்
எனவே மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த செப்டம்பர் 12,19,26-ந்தேதிகள் மற்றும் 3-ந் தேதிகளில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 1,03,526 நபர்களுக்கு முதல் தவணையும், 33,059 பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர் முகாம்கள் மற்றும் நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் பயனாக நாளொன்றுக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் 1.47 சதவீதமாக இருந்த நோய் தொற்று விகிதம் அக்டோபர் மாதம் 0.6 சதவீதமாக குறைந்துள்ளது.
441 இடங்களில்
தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 15 முதல் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்கவும், மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் வகையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) 5-வது சிறப்பு மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதற்காக 441 இடங்களில் சிறப்பு கூடுதல் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தில் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய வட்டாரங்களில் மட்டும் 165 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு குழு
இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, கிராம அளவிலான கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக மாவட்டத்தில் 50,250 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5,770 கோவேக்சின் தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எனவே மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் முதல் தவணை தடுப்பூசியையும், 2-வது தவணைக்காக காத்திருப்பவர்கள் 2-வது தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்வதோடு, கொரோனாவுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story