பறிக்கப்படாமல் கொடியிலேயே அழுகி வீணாகும் திராட்சை


பறிக்கப்படாமல் கொடியிலேயே அழுகி வீணாகும் திராட்சை
x
தினத்தந்தி 8 Oct 2021 10:40 PM IST (Updated: 8 Oct 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

சின்னாளப்பட்டி பகுதியில் விலை வீழச்சியால் திராட்சை பழங்கள் பறிக்கப்படாமல், அவை கொடியிலேயே அழுகி வீணாகி வருகின்றன.

சின்னாளப்பட்டி: 


திராட்சை விலை வீழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே சிறுமலை அடிவார பகுதிகளான காந்திகிராமம் அண்ணாநகர், தொப்பம்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, அமலிநகர் உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் வாரத்தில் ஒரு கிலோ திராட்சை ரூ.80-க்கு விற்பனை ஆனது. ஆனால் அப்போது சிறுமலை அடிவார பகுதிகளில் திராட்சை பழங்கள் அறுவடைக்கு வரவில்லை. 

இதற்கிடையே தற்போது பெரும்பாலான திராட்சை தோட்டங்களில் பழங்கள் பழுத்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் கடந்த 2 வாரங்களாக திராட்சை விலை திடீரென்று வீழ்ச்சி அடைந்தது. அதன்படி, திராட்சை விலை கிலோ ரூ.30-க்கு கீழே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் திராட்சை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அழுகி வீணாகின்றன
மேலும் திராட்சை கிலோ ரூ.30-க்கு விற்பனையானால் கூட நஷ்டமின்றி தப்பித்துக்கொள்ளலாம் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் திராட்சை பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதனால் திராட்சை தோட்டங்களில் குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்யாததால் பழங்கள் அழுகி கொடியிலேயே வீணாகி வருகின்றன. இதனால் ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்து 500 டன் வரை கிடைத்த திராட்சை பழங்கள் கொடியிலேயே அழுகி வீணாவதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

இதுகுறித்து காந்திகிராமம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்டீபன் கூறுகையில், தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு திராட்சை நல்ல விளைச்சலை கொடுத்தது. ஆனால் அறுவடைக்கு வரும்போது மழை பெய்ததால் வியாபாரிகள் வரவில்லை. இதனால் பறிக்கப்படாமல் கொடியிலேயே திராட்சை பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட திராட்சை விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story