தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள செய்திகள் வருமாறு:-
ஆபத்தான பாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் வீரசோழன் ஆற்றங்கரையில் கோமல்-பெரட்டக்குடி இடையே சிமெண்டு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் கொழையூர், பூவாலை, பெரட்டக்குடி, செங்குடி, அசிக்காடு ஆகிய கிராம மக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகிறார்கள். கோமல் கிராமத்தில் தான் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வேளாண் வங்கி ஆகியவை இருக்கின்றன. சுற்று வட்டார கிராமம் மக்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பாலத்தில் தான் சென்று வருகிறார்கள். மழை காலம் என்பதால் பாலம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?
-குண.ஹரிகரன், கொழையூர்.
வீடுகளை தொட்டு செல்லும் மின்கம்பிகள்
திருவாரூர் கே.பி.எ.நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. அருகில் உள்ள வீடுகளின் சுவரில் மின்கம்பிகள் உரசியபடி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகின்றனர். வீட்டின் மாடியில் சிறுவர், சிறுமிகள் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. எனவே பேராபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.
-
பொதுமக்கள், திருவாரூர்.
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மாநில நெடுஞ்சாலை முதல் ஆறுபாதி கிராமம் வரை சாலைகளில் கோவில்கள் அருகருகே உள்ளன. இந்தநிலையில் பகல், இரவு எனப்பாராமல் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு, அந்த பகுதியினரை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். மாணவ-மாணவிகள் அந்த சாலையில் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர் எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்கு முன்பு போலீசார் ரோந்து பணி மூலமாக கண்காணிப்பதும் மிகமிக அவசியம் என இந்தபகுதி் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் மது அருந்த தடை செய்யப்பட்ட பகுதி என்று விளம்பர பலகைகள் வைத்து பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டு என அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-பொதுமக்கள், ஆறுபாதி-மயிலாடுதுறை.
Related Tags :
Next Story